top of page

எங்கள் முதற்திரைப்படம் பிறந்த கதை 

பிரனிதி மற்றும் குடும்பத்தினருடனான எனது முதல் சந்திப்பு மறக்க முடியாதது.  பிரனிதிக்குச் சிறந்த குரல் வளம் இருப்பதாக உலகம் அறிந்திருந்தபோது இளம் வயதில் அவர் YouTube இல் பாடல்களைப் பாடுவதைப் பார்க்கையில் அவரது உணர்வாளும் திறமையையையும் என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

​​

பலவிதமான உணர்ச்சிகளை சிரமமின்றித் தனக்குள்ளிருந்து கொண்டு வரும் பிரனிதியின் அசாதாரணத் திறனை ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போதும் உணர்ந்தேன்.  அந்தத் தருணங்களில், நான் ஒரு பாடகியை மட்டுமல்ல! பார்க்கும், தன் குரல் கேட்கும் யாரையும், அன்பு கலந்த உற்சாகத்தால் கட்டிப் போடும் திறன் கொண்ட ஒரு சகலகலா வல்லியைப் பார்த்தேன்.

வீட்டில் காலடி எடுத்து வைத்ததும், பிரனிதியின் அம்மாவும் அப்பாவும் என்னை அன்புடன் வரவேற்றனர். என்னைப் பார்த்ததும் கண்களில் பிரகாசத்துடன், "மாமா! நான் உங்களுக்காக இந்தப் பாடலை பியானோவில் வாசிக்கப் போகிறேன்" என்றார், பிரனிதி.

பியானோவில் அமர்ந்த பிரனிதியின் விரல்கள் நடனமிட, அவர் அப்பா, "இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவள் பியானோவைத் தொடுகிறாள்,"  என்று சொல்ல, அந்தத் தருணத்தில், நான் ஒரு திறமையான கலைஞரின் ரசிகன் என்ற நிலை தாண்டி, மனதின் எல்லைகளைத் தாண்டிய எங்கள் இரு இதயங்களின் இணைப்பைக் கண்டேன் - பகிர்ந்து கொள்ளப்பட்ட மகிழ்ச்சி மற்றும் பாசத்தின் மொழியில் மெளனமாக உருவான இணைப்பே அது.

​​​

முதலில் - பிரனிதி நான் எழுதிய பாடலைத் தன் குரலால் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற மறக்க முடியாத மகிழ்ச்சியாக இருந்த, ஆங்கிலத்தில் நான் எழுதிய பாடலின் பதிவுடன் எங்கள் படைப்புப் பயணம் தொடங்கியது. ஆரம்பத்தில் ஒரு யோசனையாகத் தொடங்கியது விரைவில் ஒரு முழு நீளத் திரைப் படமாக உருவானது. ஒரு மகளுக்கும் அவளுடைய தந்தைக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட மென்மையான அன்பு, காதல், குடும்ப உறவுகள் மற்றும் மனித உறவுகளில் மன வேறுபாடுகள், அதனால் வரும் சோதனைகள், சோதனைகளை வெல்லப் போட்டி போடும் அப்பா, மகள் என,  காட்சிக்கு காட்சி வேகமாக நகரும் திரைப் படமாக மலர்ந்துள்ளது நமது படம். 4 கோடி தடவை பார்க்கப்பட்ட பிரனிதியின் "கண்ணான கண்ணே" விஸ்வாசம் படப் பாடல், எங்கள் படத்தின் சாராம்சத்துடன் எதிரொலித்தது மட்டுமல்லாமல்,   இதயப்பூர்வமான தொடர்பைக் கொண்டிருந்ததால் அதையே தலைப்பாக வைத்து விட்டோம். 

சம்பத் கிருஷ்ணா, இதற்கு முன் இயக்குனர் பாலாவிடம் "பிதாமகன்" படத்தில் உதவி இயக்குனாராகப் பணி புரிந்திருக்கிறார். அவரது எளிய இனிய கதையை திரைக் கதையாக எழுதினோம். "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!" மற்றும் "காஷ்மோரா" படங்களில் உதவி இயக்குநராகப் பணி புரிந்த பிரசாந்த் திரைக் கதையைச்  செம்மைப்படுத்தித் திரைப்படத்தின் அனைத்துத் துறைகளிலும் ஒரு இன்றியமையாத பங்கை அளித்து வருகிறார்.

எடிட்டர் அபிஷேக், எங்கள் அணியின் மிகப் பல்துறை திறமை கொண்ட உறுப்பினராக, ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிடத்தகுந்த அளவில் பங்களித்துள்ளார். விருதுகள் பெற்ற சினிமாடோகிராஃபர் சாம் கே. ரொனால்ட், இன்னொரு தலை சிறந்த அணியினர் - ஒளிப்பதிவு கலைக்குத் தலைமையேற்கின்றதுடன், பல்வேறு துறைகளிலும் நிர்வாக பணிகளிலும் உதவுகிறார்.

 

சாம் இல்லாதபோது, பரத் அவருக்குப் பதிலாகச் சிறப்பாக செயல்படுகிறார். உதவி இயக்குநரும் திறமையான வடிவமைப்பாளருமான தமிழ்ச்செல்வன், தனது படைப்பாற்றலால் அணிக்கு புதிய வண்ணத்தைச்  சேர்க்கிறார். அருண் விஜய், நடிகராகவும் உதவி இயக்குநராகவும் பணியாற்றியதோடு, கதாப்பாத்திரத் தேர்வில் முக்கியப் பங்காற்றி, எங்களுக்கு மாபெரும் கண்டுபிடிப்பாக அமைந்தார். பிரனிதியின் தந்தை மார்க்கெட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷனில் ஒரு முக்கியப்  பங்காற்றி வருகிறார். பிரநிதியின் அன்னை அவர்கள் ஒவ்வொரு பாடலும் மெருகேறுவதற்கும் பிரனிதியின் சிறப்பான நடிப்பிற்கும் உறுதுணையாக இருந்து வருகிறார். 

 

பல்வேறு திறமையான ஆளுமைகள் மேலும் உள்ளனர், அவர்களைப்பற்றிய தகவல் விரைவில் எங்கள் திரைப்படப் பக்கத்தில் சேர்க்கப்படும்.

படப்பிடிப்புக் கால  நாட்கள் தூய்மையான அன்பால் நிரப்பப்பட்டன. இந்த நேரத்தில், நான் சிலம்பத்தைக் கற்றுக்கொண்டு பிரனிதி எனது அமெச்சூர் திறன்களைப் பகிர்ந்துகொண்டேன்.பிரனிதி எளிதில் கற்றுக் கொண்டார். எந்தக் காட்சியாயிருந்தாலும் உணர்வுகளை, உடனடியாக, ஆனால் மங்கா ஆழத்தில் கொண்டு வந்தார் பிரனிதி. எனது மகள் படப்பிடிப்பு நாட்களில் வீட்டிலும் நான் வெளியூரிலும் இருந்தது,  ஏக்கத்தை ஏற்படுத்தியது. அதை இன்னொரு அன்பு மகள் பிரனிதி போக்கினார். 

படத்தில், நடிப்புத் திறமை மட்டும் அல்லாமல் இரண்டு பாடல்களுக்கு தனது அழகான குரலையும் வழங்கியுள்ளார்.​​ சீதா என்னும் பிரனிதியின் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி "சீதாவின் பிறப்பு, சீதாவின் அன்பு, சீதாவின் சோதனை, மற்றும் சீதாவின் பக்தி" என பாடல்கள் அமைத்துள்ளோம்.

பிரனிதி எனக்கு இன்னொரு மகளாக வாழ்க்கையில் இருப்பது, அல்லது  நாங்கள் சினிமா - பாடல் மூலம் மட்டும் பழகும் சக கலைஞர்களாக இருப்பது - இவை இரண்டில் ஒன்று மட்டுமே நான் தேர்ந்தெடுக்க முடியும் என்றால் நான் இந்தத் தெய்வக் குழந்தை எனக்கு மகளாக இருப்பதையே கண்ணிமைக்கும் நேரத்தில் தேர்ந்தெடுப்பேன்.

 

நல்ல வேளை - அந்தச் சோதனை இன்றில்லை. இந்தக் குழந்தை போல் இன்னும் பல பெறாத குழந்தைகளை நான் நெஞ்சில் ஏற்றும் வாய்ப்புகளுடன், நாங்கள் இருவரும், மென் மேலும் பல திரைப்படங்கள், பாடல்கள் உருவாக்கும்படி அமைய நீங்களும் அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டால், அதுவே எனக்கு அளப்பரிய பரிசாகும்.

IMG_0819.jpeg
PXL_20230916_120138568.jpg
PXL_20221201_061901601_Original (1).jpg
bottom of page